பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு


பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு
x

அடுத்தடுத்து அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் வீடுகளில் பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு

திருப்பூர்

தாராபுரம்,

தாராபுரம் அருகே அடுத்தடுத்து அரசு பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் வீடுகளில் பூட்டை உடைத்து 14 பவுன் நகையை திருடி சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அரசு பஸ் கண்டக்டர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சபரி அய்யப்பன் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 56). இவர் தாராபுரம் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு முருகேன், வீட்டை பூட்டி விட்டு மூலனூரில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற விஷேசத்துக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை 11 மணி அளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகையை காணவில்லை மர்ம ஆசாமிகள் அவற்றை திருடி சென்றது தெரியவந்தது.

மற்றொரு வீடு

அதேபோன்று தாராபுரம் அலங்கியம் சாலையில் உள்ள மெட்ரோ சிட்டியை சேர்ந்தவர் பாலு. இவரும் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரும் நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்றார். பின்னர் பணி முடிந்து நேற்று மதியம் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது கதவின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இச்சம்பவங்கள் குறித்து இருவரும் தாராபுரம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாஸ்கர், கருப்புசாமி மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீடுகளுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story