கோமுகி, மணிமுக்தா அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்: வானாபுரத்தில் 13 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் நேரடி போக்குவரத்து துண்டிப்பு


தினத்தந்தி 12 Nov 2022 6:45 PM GMT (Updated: 12 Nov 2022 6:47 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரத்தில் 13 செ.மீ. மழை நேற்று கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் இடையேயான நேரடி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி


உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 2 நாட்களாக தீவிரமடைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவில் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை முழு கொள்ளளவான 46 அடியில் 44 அடியை எட்டிய நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் உபரிநீராக கோமுகி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோன்று மாவட்டத்தில் உள்ள மற்றொரு அணையான மணிமுக்தா அணையின் மொத்த நீர்மட்டமான 36 அடியில் 34 அடி தண்ணீர் உள்ள நிலையில், நீர்வரத்தானது வினாடிக்கு 1550 கனஅடி உள்ள நிலையில், அந்த நீர் அப்படியே உபரிநீராக மணிமுக்தாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காலையில் ஓய்ந்தது மழை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீவிரம் காட்டிய மழை, நேற்று காலையில் ஓய்ந்து காணப்பட்டது. வானில் கருமேக கூட்டங்கள் ஏதுமின்றி, வெண்மேகங்கள் நிறைந்து காணப்பட்டது. இதனால் சூரியன் சுள்ளென சுட்டெரித்தது.

இதனால், குடியிருப்பு பகுதியை சூழ்ந்திருந்த மழைநீரும் மெல்ல வடிய தொடங்கியது. இதற்கிடையே முன்னெச்சரிக்கையாக தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

சென்னை பஸ்கள் மாற்றுவழியில் இயக்கம்

மாவட்டத்தில் மழை ஓய்ந்து இருந்தாலும், ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, உளுந்தூர்பேட்டை அருகே பாலகொள்ளையில் விருத்தாசலம் செல்லும் சாலையில் உள்ள நரியனோடை தரைப்பாலம், வெள்ளத்தில் மூழ்கியது.

இதற்கிடையே, விருத்தாசலம் அருகே உளுந்தூர்பேட்டை சாலையில் செம்பளக்குறிச்சியில் உள்ள தரைப்பாலம் மழைநீரில் மூழ்கி போனது. இதனால், விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை இடையிலான நேரடி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து மாற்றுப்பாதையாக பூவனூர், பாலக்கொள்ளை மற்றும் நரியனோடை வழியாக உளுந்தூர்பேட்டை- விருத்தாசலம் போக்குவரத்து நேற்று மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சென்னை செல்லும் பஸ், கார்கள் என்று அனைத்து வாகனங்களும் இதன் வழியாகவே சென்று வந்தன.

6 வீடுகள் சேதம்

சங்கராபுரம் அருகே ஊராங்காணி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மனைவி ஜெயக்கொடி என்பவரின் கூரை வீடு, கள்ளிப்பட்டு முருகன் மனைவி திருமலையம்மாளின் கூரை வீடு சுவர் இடிந்து விழுந்து சேதமானது.

அதேபோன்று, அருளம்பாடி கிராமம் தங்கவேல் மனைவி கிருஷ்ணவேணி, நடுமொழிபட்டு அண்ணாமலை ஆகியோரது ஓட்டு வீட்டின் ஒரு பகுதி சுவரும், ரிஷிவந்தியம் குள்ளவண்டு மகள் இந்திராகாந்தி என்வரது அரசு தொகுப்பு வீடும், இது தவிர மேலும் ஒரு குடிசை வீடு என்று மொத்தம் 6 வீடுகள் இடிந்து விழுந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை.

மழை அளவு

நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக வானாபுரத்தில் 13 செ.மீ. மழையும், குறைந்தபட்சமாக திருப்பாலபந்தலில் 3 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் பிற பகுதியில் பதிவான மழை அளவு செ.மீட்டரில் வருமாறு:-

ஊ.கிரனூர் 11.3, ரிஷிவந்தியம் 7.8, தியாகதுருகம் 7.2, கலையநல்லூர் 6.6, விருகாவூர், மூரார்பாளையம், சூளாங்குறிச்சி 6.5, கோமுகி அணை 6.4, கச்சிராயப்பாளையம் 6.1, வடசிறுவலூர் 5.9, மணலூர்பேட்டை 5.3, அரியலூர், மூங்கில்துறைப்பட்டு, எறையூர், மணிமுக்தா அணை 5.8, குவனூர் 5.7, கள்ளக்குறிச்சி, கீழ்பாடி 5.1, வேங்கூர் 5, ஆதூர் 4, மாடாம்பூண்டி 4.2, திருக்கோவிலூர் 3.7 என்கிற அளவில் மழை பதிவாகி இருந்தது.


Next Story