பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது; அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு


பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது; அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு
x
தினத்தந்தி 1 May 2023 9:00 PM GMT (Updated: 1 May 2023 9:01 PM GMT)

பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது என்று அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா, திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவுக்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, மாநகராட்சி மேயர் இளமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேர்வு செய்யப்பட்ட 450 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், புதுமைப்பெண் திட்டம், நகர பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்த நாள் அன்று குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விழாவில் கர்ப்பிணிகளுக்கு சேலை, பேரிச்சம்பழம், கடலை மிட்டாய், வளையல், குங்குமம், வாழைப்பழம், குழந்தை ஆரோக்கிய பூரிப்பு கையேடு உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி, திட்ட அலுவலர் பூங்கோதை, சிறுமலை வன உரிமைக்குழு தலைவர் நெடுஞ்செழியன், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராஜா, சிறுமலை ஊராட்சி உறுப்பினர் வெள்ளிமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story