கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தலில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தலில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 34). இவர் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு, வீடாக சென்று குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவுக்கு கடத்தி வந்தார். கடந்த ஆகஸ்டு மாதம் முதல் சின்னகோட்டப்பள்ளி, கிருஷ்ணகிரி ஆவின் பாலம், காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இவருடைய 5 வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சத்தியமூர்த்தி தலைமறைவானார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தில் உள்ள அவரது வீட்டில் பதுங்கி இருந்த சத்தியமூர்த்தியை பிடிக்க கடந்த 3-ந் தேதி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்றனர். தப்பிக்க முயன்ற சத்தியமூர்த்தியை போலீசார் மடக்கி பிடித்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
சத்தியமூர்த்தி மீது ஏற்கனவே பல்வேறு ரேஷன் பொருட்கள் கடத்தல் வழக்குகள் இருப்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பரிந்துரைத்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, சத்தியமூர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்தியமூர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.