அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும்
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ஜோசப் சேவியர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கல்வி மாவட்ட செயலாளர் சிங்கராயர், ஆசிரியர் கூட்டணி மாநில துணை பொதுச்செயலாளர் ராஜா, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அருள், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில பொறுப்பாளர் சுந்தரேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 2006 ஜூன் மாதம் முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும்.
அரசு உதவி பெறும் பள்ளி
மாணவர்களின் கல்வி தரத்தை பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். பதிவேற்ற பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவித்து முழுமையான கற்பித்தல் பணியை செய்ய அனுமதிக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நலத்திட்டங்களை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.
தன் விடுப்பு உரிமையினை மீண்டும் வழங்க வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பழைய முறையில் தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 13-ந் தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ராமதாஸ் நன்றி கூறினார்.