இந்தி திணிப்பை கண்டித்து அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்பை கண்டித்து அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்தியை பயிற்று மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து கோவை அரசு கலைக்கல்லூரி முன் நேற்று மாணவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் கூட்டமைப்பின் மாநில தலைவர் அரவிந்த்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அசாருதீன், பொதுக்குழு உறுப்பினர் கயல்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து மாணவர் அமைப்பினர் கூறியதாவது:-
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை பயிற்று மொழியாக்கிடும் வகையில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மேலும் மத்திய அரசு துறைகளில் போட்டித்தேர்வுகளை ஆங்கிலத்தில் நடத்துவதற்கு பதிலாக இந்தியில் நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.
இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மாணவ-மாணவிகளின் வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வியை இது கடுமையாக பாதிக்கும். எனவே மத்திய அரசு இந்தி திணிப்பை கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.