ராமநாதபுரம்: அரசு பஸ் மோதிய விபத்தில் பஸ்சுக்கு காத்திருந்தவர்கள் 2 பேர் பலி

பஸ்சுக்கு காத்திருந்தவர்கள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம்,
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி இன்று மதியம் 1.30 மணியளவில் அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் ராமநாதபுரம் வழியாக சென்னை செல்லவிருந்தது.
ராமநாதபுரம் கீழக்கரை தனியார் கல்லூரி அருகே இன்று மாலை அரசு பஸ் வந்தபோது சாலையின் எதிரே தூத்துக்குடிக்கு மீன் ஏற்றிக்கொண்டு வாகனம் சென்றுள்ளது. மீன் ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் மற்றொரு வாகனத்தை முந்திச்செல்ல முயற்சித்தபோது அரசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிலையத்தை உடைத்துக்கொண்டும் அருகே இருந்த கல்லூரி தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டும் கல்லூரிக்குள் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் கல்லூரி அருகே உள்ள பஸ் நிலையத்தில் பஸ்சுக்கு காத்திருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சுக்கு காத்திருந்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.