அரசு பஸ்-கார் மோதல்; பயணிகள் தப்பினர்
உச்சிப்புளி அருகே அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
பனைக்குளம்,
உச்சிப்புளி அருகே அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
பஸ்-கார் மோதல்
நெல்லையில் இருந்து ராமேசுவரத்திற்கு அரசு பஸ் ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை டிரைவர் மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்தார். அந்த பஸ் நேற்று ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பெருங்குளம் பகுதியில் சென்ற போது எதிரே ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த காரும், பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது.
லேசான காயத்துடன் தப்பினர்
இதில் அரசு பஸ்சும், காரின் முன் பகுதியும் பலத்த சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக அரசு பஸ் மற்றும் காரில் இருந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள்.
இது குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் மீது மோதிய கார் சிவகங்கை மாவட்டம் வலசைபட்டி கிராமத்தைச் சேர்ந்தது என்பதும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5-க்கும் மேற்பட்டோர் அந்த காரில் ராமேசுவரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்ததும், அந்த காரை டிரைவர் யுவராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளதும் தெரியவந்தது.