அரசு பஸ் மோதி கொத்தனார் பலி


அரசு பஸ் மோதி கொத்தனார்  பலி
x

அழகியமண்டபத்தில் அரசு பஸ் மோதி கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

தக்கலை:

அழகியமண்டபத்தில் அரசு பஸ் மோதி கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-

கொத்தனார்

தக்கலை அருகே உள்ள முளகுமூடு, காடுவெட்டி பகுதியை சேர்ந்தவர் வில்சன்ட்ராஜ் (வயது54), கொத்தனார். இவருக்கு ஜாயி ஞான லதா (48) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்தமகளுக்கு திருமணமாகி விட்டது.

இவரது இரண்டாவது மகளுக்கு பணக்குடியில் உள்ள ஒரு வங்கியில் ஒரு மாதத்திற்கு முன்பு வேலை கிடைத்தது. இவர் தினமும் பஸ்சில் வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று மாலை 6.40 மணியளவில் வில்சன்ட்ராஜ், வேலை முடிந்து பஸ்சில் வரும் மகளை, வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக முளகுமூடு பஸ் நிறுத்தம் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

அப்போது, வீட்டுக்கு தேவையான சில பொருட்கள் வாங்குவதற்காக அழகியமண்டபம் சென்றார். அங்கிருந்து பொருட்கள் வாங்கிவிட்டு மீண்டும் முளகுமூடு நோக்கி செல்ல முயன்றார். அந்த பகுதியில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்ததால் சாலையை கடப்பதற்காக மோட்டார் சைக்கிளுடன் சாலைேயாரம் நின்று கொண்டிருந்தார்.

அரசு பஸ் மோதியது

அப்போது தக்கலையில் இருந்து வேர்க்கிளம்பி, மேக்காமண்டபம் வழியாக திங்கள்சந்தை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி வில்சன்ட்ராஜ் மீது பயங்கரமாக மோதியது. அந்த பஸ் மோதிய வேகத்தில் அவரை தூக்கி சென்று எதிரே சாலையில் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் வில்சன்ட்ராஜ் இரண்டு வாகனங்களுக்கு இடைேய சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்து குறித்து அறிந்த தக்கலை பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வில்சென்ட்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story