அரசு பஸ்- கன்டெய்னர் லாரி மோதல்; 5 பேர் காயம்
மானூர் அருகே அரசு பஸ்- கன்டெய்னர் லாரி மோதியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.
மானூர்:
சங்கரன்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. மானூர் அருகே சேதுராயன் புதூர் விலக்கு அருகே வந்தபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச் சென்றது. அப்போது எதிரே வந்த கண்டெயனர் லாரி மீது எதிர்பாராதவிதமாக பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் மகேந்திரன் (வயது 37) மற்றும் அரசு பஸ் டிரைவர் கங்கைகொண்டான் துறையூரைச் சேர்ந்த அலெக்சாண்டர் (55), கண்டக்டர் கரிவலம்வந்தநல்லூரை சேர்ந்த முருகன் (49), பஸ்சில் பயணித்த பயணி ஆரைக்குளத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி மரியசுபினா (25), அவரது 4 மாத குழந்தை செல்வின் ஆகியோர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.