அரசு பஸ் டிரைவர் 'திடீர்' சாவு


அரசு பஸ் டிரைவர் திடீர் சாவு
x
தினத்தந்தி 12 Jun 2023 10:19 PM IST (Updated: 13 Jun 2023 11:52 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்சை நிறுத்தி விட்டு இரவில் தூங்கியபோது, டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள பாடியூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42). இவர், திண்டுக்கல்லில் இருந்து மாமரத்துப்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த பஸ் தினமும் இரவு திண்டுக்கல்லில் இருந்து மாமரத்துப்பட்டிக்கு சென்று, அங்கேயே நிறுத்தப்பட்டு மறுநாள் காலை மீண்டும் திண்டுக்கல்லுக்கு இயக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு கார்த்திகேயன் பஸ்சை மாமரத்துப்பட்டிக்கு ஓட்டிச்சென்றார். அந்த பஸ்சில் சரவணன் கண்டக்டராக இருந்தார். மாமரத்துப்பட்டியில் பஸ்சை நிறுத்திவிட்டு, அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் 2 பேரும் இரவில் தூங்கினர்.

இந்தநிலையில் நேற்று காலை பஸ்சை எடுப்பதற்காக சரவணன், கார்த்திகேயனை எழுப்பினார். அப்போது கார்த்திகேயன் மயங்கிய நிலையில் இருந்தார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன், அவரை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சரவணன் கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கார்த்திகேயன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மாரடைப்பு காரணமாக கார்த்திகேயன் உயிரிழந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கார்த்திகேயனுக்கு சரஸ்வதி (34) என்ற மனைவியும், திருக்குமரன் (11) என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story