அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி


குழித்துறை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

குழித்துறை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.

மகளுடன் சென்ற தம்பதி

குமரி மாவட்டம் மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் குட்டப்பன். இவருடைய மகன் அருள்ராஜ் (வயது 30), வெளிநாட்டில் கட்டிட வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சுபிஜா (27). இவர்களுடைய ஒரே மகள் அஸ்வந்திகா (3). இவர்கள் தற்போது களியக்காவிளை அருகே உள்ள கூட்டப்புளி பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். 5 மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அருள்ராஜ் மனைவி, குழந்தையுடன் மிகவும் சந்தோசமாக இருந்து வந்தார்.

இதற்கிடையே இவர்களுடைய உறவினர் ஒருவர் குழித்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை பார்ப்பதற்காக நேற்று மாலையில் அருள்ராஜ் தன்னுடைய மனைவி, குழந்தையை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

பஸ் மோதியது

ஆஸ்பத்திரிக்கு சென்று உறவினரை சந்தித்து நலம் விசாரித்து விட்டு வீடு நோக்கி இரவில் மீண்டும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். குழித்துறையை அடுத்த கல்லுக்கட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்தது. அப்போது பஸ், மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சாலையில் விழுந்த அருள்ராஜ், சுபிஜா, குழந்தை அஸ்வந்திகா ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடினர்.

3 பேர் சாவு

இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும், இதுபற்றி தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் குமரியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story