நடுரோட்டில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து
நடுரோட்டில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து
திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த வில்லாணியை சேர்ந்த குணசேகரன் (வயது 44) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக சக்கரைப்பட்டியை சேர்ந்த அருண் (35) என்பவர் சென்றார். பஸ்சில் 5-க்கும் மேற்பட்டோர் மட்டுமே பயணம் செய்தனர்.
நள்ளிரவு நேரத்தில் கொடைரோடு சுங்கச்சாவடியை அடுத்த சடையாண்டிபுரம் பிரிவு பகுதியில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கண்டக்டர் மற்றும் பஸ்சில் பயணம் செய்த அருப்புகோட்டையை சேர்ந்த ராஜாராம் (40), அவருடைய மகன் விபுசன் (8) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து காரணமாக திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.