பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்
நாட்டறம்பள்ளி அருகே அரசு பஸ் பள்ளத்தில் சிக்கியது.
நாட்டறம்பள்ளியில் புறவழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏரிக்கோடி பகுதியில் இருந்து சண்டியூர் வரையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இதற்காக சுமார் மூன்று அடி அளவிலான பள்ளங்கள் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூருக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது ஏரிகோடி பகுதியில் சென்றபோது சாலையின் இடது பக்கம் தோண்டப்பட்ட கால்வாய் பள்ளத்தில் நிலை தடுமாறி இறங்க முற்பட்டபோது, டிரைவர் திடீரென வலது பக்கம் திருப்பி உள்ளார். அப்போது வலது பக்கம் இருந்த இரண்டு அடி பள்ளத்தில் சக்கரம் மாட்டிக் கொண்டது. உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்து கீழே இறங்கினர். இதில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. பின்னர் மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.