அரசு பஸ்கள் மோதல்
அரசு பஸ்கள் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது.
திருச்சியில் இருந்து குளித்தலை வழியாக கரூர் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. அதுபோல ஈரோட்டில் இருந்து திருச்சி செல்லும் அரசு பஸ் ஒன்று குளித்தலை நோக்கி சென்று கொண்டிருந்தது. திருச்சி-கரூர் மாநில நெடுஞ்சாலையில் குளித்தலை அருகே உள்ள எல்லரசு பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த 2 அரசு பஸ்களும் முன்பக்க பக்கவாட்டுகளில் மோதி விபத்துக்குள்ளாகி சாலையோர பள்ளத்தில் இறங்கிவிட்டது. இந்த விபத்தில் 2 பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்து சேதமானது. ஆனால் இந்த விபத்தில் 2 பஸ்களில் பயணம் செய்த பயணிகள் எந்தவித காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பஸ்கள் விபத்துக்குள்ளானதால் அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் வேறு பஸ்களில் ஏற்றி விடப்பட்டனர். பயணிகள் பலர் நடந்தே குளித்தலை பகுதிக்கு சென்றனர். இந்த விபத்து காரணமாக வாகனங்கள் அனைத்தும் புறவழி தேசிய நெடுஞ்சாலை வழியாக மாற்றி விடப்பட்டது. இந்த விபத்தால் இச்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.