பாம்பன் பாலத்தில் அரசு பஸ்கள் மோதல்; 30 பயணிகள் காயத்துடன் தப்பினர்


பாம்பன் பாலத்தில் அரசு பஸ்கள் மோதல்; 30 பயணிகள் காயத்துடன் தப்பினர்
x

கடல் நடுவே உள்ள பாம்பன் பாலத்தில் நேற்று காலை அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயத்துடன் தப்பினர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 5.30 மணிக்கு மதுரைக்கு 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ், கடல் நடுவே உள்ள பாம்பன் பாலத்தில் வந்து கொண்டிருந்தது.

இந்த பஸ்சும், திருச்சியில் இருந்து ராமேசுவரம் நோக்கி சென்ற அரசு பஸ்சும் பாம்பன் ரோடு பாலத்தில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் மதுரை நோக்கி வந்த அரசு பஸ் டிரைவர் ஞானஜெகதீஷ் (வயது 49), கண்டக்டர் முத்துப்பாண்டி, திருச்சியில் இருந்து ராமேசுவரம் சென்ற அரசு பஸ்சின் டிரைவர் சந்திரசேகர், கண்டக்டர் மற்றும் 2 பஸ்களில் இருந்த பயணிகள் என 30-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் உயிர்தப்பினர்.

பாம்பனில் நேற்று காலையில் கனமழை பெய்ததால் கட்டுப்பாட்டை இழந்து பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக பாம்பன் பாலத்தில் நேற்று அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மீண்டும் விபத்து

கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் பாம்பன் பாலத்தில் ஆம்னி பஸ் மற்றும் அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளாகின. தற்போது மீண்டும் பஸ்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

பாம்பன் ரோடு பாலத்தில் அடிக்கடி விபத்து நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக உள்ள வழுவழுப்பான சாலையை உடனடியாக அகற்றி, புதிய சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story