அடிக்கடி பழுதாகி நடுரோட்டில் நிற்கும் அரசு பஸ்களால் பயணிகள் பரிதவிப்பு-உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
நீலகிரி மாவட்டத்தில் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நிற்கும் பஸ்களால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நிற்கும் பஸ்களால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
போக்குவரத்து கழக பணிமனை
கோவை கோட்டத்திற்கு உட்பட்ட நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி-1, ஊட்டி-2, குன்னுார், கோத்தகிரி, கூடலூர், மேட்டுப்பாளையம்-1 ஆகிய அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள், தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்குள் என 270 வழித்தடங்களில் 335 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் அரசு பஸ்சை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.38 லட்சம் வருமானம் வருகிறது.
இதற்கிடையே மாவட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் ஓடும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்று விடுவதாகவும், இதனால் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும்போது கடும் அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஈரோடு முதல் ஊட்டி...
நேற்று காலை ஈரோட்டில் இருந்து 9 மணிக்கு கிளம்பி ஊட்டிக்கு வரும் அரசு பஸ் மதியம் ஒரு மணி அளவில் பர்லியார் சாலையில் பழுதாகி நின்றுவிட்டது. இதனால் பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்தனர். இதையடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த வழியாக வந்த மற்ற பஸ்களில் ஏறி ஊட்டிக்கு வந்தனர். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:
ஆதிமூலம்:-
சேலத்தில் இருந்து ஊட்டிக்கு வருகிறேன். ஈரோட்டில் பஸ் ஏறினேன். ஈரோட்டில் இருந்து கிளம்பும்போது வழக்கத்தைவிட வேகமாக வந்ததால் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் மலைப் பாதையில் ஏறியவுடன் பஸ் பழுதாகி விட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. அடித்துப் பிடித்து வந்து பஸ்ஸில் ஏறி விட்டேன் ஆனால் இடம் இல்லாததால், நின்று கொண்டே பயணித்ததில் கால்கள் வலிக்கிறது. அதனால் பழுதான நிலையில் இயக்கப்படும் பஸ்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்.கிருஷ்ணமூர்த்தி:-
திருச்சியில் இருந்து கூடலூர் அருகே உள்ள எருமாடு செல்கின்றேன். யானை வழித்தடங்களில் உள்ள சாலையில் வாகனங்கள் இவ்வாறு திடீர் பழுதாகி அடிக்கடி நிற்கிறது. இரவு நேரமாகி இருந்தால் என்ன செய்வது. அதேபோல் மழை வந்தால் என்ன செய்ய முடியும். இன்று, நாளை முகூர்த்தம் என்பதால் சென்றுதான் ஆக வேண்டும். தற்போது வாங்கப்பட்ட புதிய பஸ்கள் சரியான பராமரிப்பு இல்லாததால் இவ்வாறு ஆகிவிடுகிறது.
சரியாக பராமரிக்க வேண்டும்
குன்னுரை சேர்ந்த மேனகா:-
ஈரோட்டில் ஏறும் போது, இடையில் இருந்த ஊர்களுக்கு பயணிகளை ஏற்றவில்லை. ஊட்டி பயணிகளை மட்டுமே அனுமதித்தனர். அந்த அளவுக்கு இருக்கும்போது வாகனத்தையும் சரியாக பராமரிக்க வேண்டமா.? ஒரு காலத்தில் சாலை சரி இல்லாமல் இருக்கும். தற்போது சாலை நன்றாக உள்ளது. ஆனால் வாகனங்கள் சரியில்லாமல் உள்ளது. பொதுவாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு குறைவான பஸ்கள் இருப்பதால் இருக்கைகள் பின்னால் வரும் வாகனங்களில் காலியாக இருக்காது. எனக்கு வாலிபர் ஒருவர் எழுந்து இடம் கொடுத்தால் தப்பித்தேன். நின்று கொண்டே பயணிப்பதில் சமவெளியாக இருந்தாலும் பரவாயில்லை. மலைப்பகுதிகளில் மிகவும் சிரமம் ஆகும். எனவே பழுதான அரசு பஸ்களை சீரமைத்து இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.