அரசு பஸ்களில் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 68 சதவீதமாக உயர்வு


அரசு பஸ்களில் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 68 சதவீதமாக உயர்வு
x

கட்டணமில்லா பயணத்தின் மூலம் அரசு பஸ்களில் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 68 சதவீதமாக உயர்ந்துள்ளது என அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

கட்டணமில்லா பயணத்தின் மூலம் அரசு பஸ்களில் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 68 சதவீதமாக உயர்ந்துள்ளது என அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

பஸ் நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் அரசு டவுன் பஸ்களில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான்(ஜி.பி.எஸ்) மூலம் பஸ் நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பஸ் நிறுத்த ஒலி அறிவிப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கலெக்டர், எம்.எல்.ஏ.க்களுடன் டவுன் பஸ்சில் ஏறி 5 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பஸ் நிறுத்த ஒலி அறிவிப்பு திட்டத்தின் செயல்பாடுகளை பரிசோதித்தார்.நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், அன்பழகன், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன், பொதுமேலாளர்கள் ஜெபராஜ் நவமணி, முகமது நாசர், துணை மேலாளர்கள் தமிழ்செல்வம், ராஜா, சிங்காரவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பேட்டி

பின்னர் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புவிசார் நவீன தானியங்கி(ஜி.பி.எஸ்) அறிவிப்பான் மூலம் பஸ் நிறுத்தங்களின் பெயர்களை பயணிகள் முன்னரே அறிந்து கொள்ளும் திட்டம் முதற்கட்டமாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் 100 பஸ்களில்(திருச்சி-40, கரூர்-15, தஞ்சை-25, கும்பகோணம்-20) இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் வெளியூர் பயணிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டதன்பேரில் இந்த பணி நடந்து வருகிறது.

ஓய்வூதிய பணப்பலன்கள்

கடந்த ஆட்சி காலத்தில் வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப்பலன்கள் பாக்கி இருந்தது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல்கட்டமாக ரூ.325 கோடியும், அடுத்தகட்டமாக ரூ.200 கோடியும் நிதி ஒதுக்கி அவை வழங்கப்பட்டு விட்டது. தற்போது முதல்-அமைச்சர் ரூ.1,200 கோடி நிதி ஒதுக்குவதற்கு அறிவிப்பு வழங்கி இருக்கிறார். அந்த நிதி வந்தவுடன் பாக்கி இல்லாமல் எல்லாம் வழங்கப்பட்டு விடும்.2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்குவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கி இருக்கிறார். முதற்கட்டமாக 400 வழக்கமான பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் 2,300 பஸ்கள் வாங்குவதற்கு நடவடிக்கையை தொடங்கியபோது, மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியுடன் கூடிய தாழ்வுதள பஸ்கள் வாங்க வேண்டும் என கோர்ட்டை நாடி இருந்தனர்.

விரைவில் புதிய பஸ்கள்

கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்ததால் தாமதமாகியது. இப்போது 430 தாழ்வுதள பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு இறுதி செய்யப்படும் நிலையில் இருக்கிறது. கோர்ட்டு அறிவுரை வழங்கி உள்ளபடி தாழ்வுதள பஸ்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து, மற்ற பஸ்கள் வாங்குவதற்கு இந்த மாதத்திற்குள் டெண்டர் விடப்பட்டு விரைவில் புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வரும்.இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசு பஸ்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது என கடந்த மாதம் புதுடெல்லியில் நடந்த மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய மந்திரி நிதின்கட்காரி தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரை அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நல்லமுறையில் பராமரிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. 21 ஆயிரம் அரசு பஸ்கள் இருக்கின்றன.

பெண்களின் எண்ணிக்கை உயர்வு

ஏற்கனவே அரசு பஸ்களில் பெண்களின் பயணம் 40 சதவீதமாக இருந்தது. கட்டணமில்லா பயணம் அறிவித்த பிறகு பெண்களின் பயணம் 68 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், பிற வாகனங்களில் சென்றவர்கள் எல்லாம் இன்றைக்கு அரசு பஸ்களில் பயணம் செய்கிறார்கள். இதனால் அவர்கள் காத்திருந்து பஸ்களில் ஏறுவதால் கூட்டம் அதிகமாக இருப்பதுபோல் தோன்றுகிறது. எந்த பஸ்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படவில்லை. எல்லா இடத்திலும் சரியான நேரத்தில் தான் பஸ்கள் இயக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story