44-வது செஸ் போட்டியை விளம்பரப்படுத்த ஒலிம்பியாட் சின்னத்துடன் அரசு பஸ்கள்


44-வது செஸ் போட்டியை விளம்பரப்படுத்த ஒலிம்பியாட் சின்னத்துடன் அரசு பஸ்கள்
x

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் நடவடிக்கையாக ஒலிம்பியாட் சின்னத்துடன் 15 அரசு பஸ்களை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

சென்னை,

இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. அந்த வகையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடக்க உள்ளது.

இந்த போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க இருக்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டிட வளாகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னத்தை கடந்த மாதம் (ஜூன்) 9-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

பஸ்களில் விளம்பரம்

அதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் 5 மாநகர பஸ்களிலும், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு செல்லும் 10 அரசு பஸ்களிலும் செஸ் ஒலிம்பியாட் இலச்சினை (லோகோ) மற்றும் சின்னத்துடன் விளம்பரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும் ''நம்ம செஸ், நம்ம பெருமை'', ''இது நம்ம சென்னை, நம்ம செஸ்'', ''வணக்கம் செஸ், வணக்கம் தமிழ்நாடு'' என்ற வாசகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், தமிழ்நாட்டு பாரம்பரிய அடையாளங்களும் அதில் பொறிக்கப்பட்டு இருக்கின்றன.

மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அவ்வாறு செஸ் ஒலிம்பியாட் குறித்து விளம்பரப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த 15 பஸ்களையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை காமராஜர் சாலையில் உள்ள மெரினா கடற்கரையோரத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, அந்த 15 பஸ்களையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.எஸ்.சிவசங்கர், சிவ.வீ.மெய்யநாதன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் வெ.இறையன்பு, போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் கே.கோபால், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, பொதுத்துறை செயலாளர் டி.ஜகந்நாதன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் உறுப்பினர் செயலர் கே.பி.கார்த்திகேயன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

காசநோய் ஒழிப்பு

2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடைய தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் வரும் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, தமிழ்நாடு காசநோய் ஒழிப்புத்திட்டம் மூலம் காசநோய் உள்ள இடங்களில் வசிப்பவர்களிடம் காசநோய் உள்ளதா? என்பதை கண்டறிய முதற்கட்டமாக 14 நடமாடும் எக்ஸ்ரே பொருத்திய வாகனங்கள் வழங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக தற்போது தலா ரூ.46 லட்சம் வீதம் ரூ.10 கோடியே 65 லட்சம் மதிப்பில் 23 நடமாடும் வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை நொச்சிக்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சியில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தடய அறிவியல் வாகனங்கள்

அதனைத் தொடர்ந்து, குற்ற நிகழ்விடத்திலேயே ஆரம்பக்கட்ட ஆய்வு மேற்கொள்ள ஏதுவாக ரூ.3 கோடியே 92 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நடமாடும் வாகனத்தில் ரத்தக்கறை, வெடிபொருள், போதைப்பொருள், துப்பாக்கி சூட்டின் படிமங்கள் ஆகியவைகளை குற்ற நிகழ்விடத்திலேயே அடையாளம் காணுவதற்கான கருவிகளை கையாளுவதற்கும், எந்தவித வெளிப்புற மாசுபடுதலுக்கும் தடய பொருட்கள் உட்படாதவாறு ஆய்வு மேற்கொள்வதற்குரிய உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆய்வக பயன்பாட்டுக்கு...

இந்த 14 வாகனங்கள் சென்னை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் மாநகர ஆணையரகங்கள், வேலூர், தர்மபுரி, கோவை, நீலகிரி, மதுரை, விழுப்புரம், ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய காவல் மாவட்டங்களின் தடய அறிவியல் ஆய்வக பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்பட உள்ளன.


Next Story