அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தினர்
விழுப்புரம்
உள்ளிருப்பு போராட்டம்
தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருபவர்கள், தங்களுடைய உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கக்கோரியும், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் இதுநாள் வரையிலும் இவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் நேற்று விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற முறையில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம்
இப்போராட்டத்திற்கு மண்டல துணைத்தலைவர் ஆரிமுத்து தலைமை தாங்கினார். கிளை தலைவர் செல்வக்குமார், செயலாளர் முருகேசன், துணை செயலாளர் தயனேஸ்வரன், பொருளாளர் பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது ராஜஸ்தான், ஒடிசா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அம்மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளதைப்போன்று தமிழகத்திலும் பணி நிரந்தரம் செய்ய முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதில் கவுரவ விரிவுரையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.