விழுப்புரம்அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து விழுப்புரம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரம் மற்றும் அங்குள்ள பழங்குடியின பெண்களை நிர்வாண கோலத்தில் ஊர்வலமாக அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவங்கள் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்த கலவர சம்பவத்தை கண்டித்தும், இச்சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கத்தவறிய மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூகநல அமைப்புகளும், மாணவர்கள் அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்
அந்த வகையில் நேற்று காலை விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கல்லூரிக்கு வந்த மாணவ- மாணவிகள் அனைவரும் காலை 10 மணியளவில் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் ஒன்றுதிரண்டனர். அப்போது, மணிப்பூரில் பெண்களை துன்புறுத்தி நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்தும், இதற்கு நடவடிக்கை எடுக்காத பா.ஜ.க. அரசை கண்டித்தும் மாணவ- மாணவிகள் கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து போராட்டத்தை முடித்துக்கொண்டு அவர்கள் அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதேபோல் விழுப்புரம் சாலாமேடு பகுதியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளும், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு கல்லூரி மாணவ- மாணவிகளின் இந்த போராட்டத்தினால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.