அரசு டாக்டரின் 2 கார்களுக்கு தீவைப்பு
ராமநாதபுரத்தில் அரசு டாக்டரின் 2 கார்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் அரசு டாக்டரின் 2 கார்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு டாக்டர்
ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் மனோஜ்குமார்.
இவர் அந்த பகுதியில் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருவதோடு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் உதவி நிலைய மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு சீட் கேட்டிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி ரத்த தான முகாம் நடத்தினார்.
2 கார்களுக்கு தீ வைப்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு டாக்டர் மனோஜ்குமார், கேணிக்கரை பகுதியில் உள்ள தனது கிளினிக்கில் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு தூங்க சென்றுவிட்டார். இரவு 10.45 மணியளவில் கிளினிக்கின் அருகில் நிறுத்தி இருந்த அவருக்கு சொந்தமான 2 கார்களுக்கு மர்ம நபர்கள் 2 பேர் தீவைத்தனர். மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடியபடி வந்த அவர்கள் காரின் பின்பகுதிக்கு சென்று பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு அங்கிருந்து வேகமாக தப்பி சென்றுள்ளனர். இதனை அருகில் உள்ள மாடி கட்டிடத்தில் இருந்து தற்செயலாக பார்த்த ஒருவர் அதிர்ச்சி அடைந்து வேகமாக இறங்கி வந்து தகவல் தெரிவித்தார். உடனடியாக அனைவரும் வெளியே வந்து காரில் பற்றிய தீயை துரிதமாக செயல்பட்டு அணைத்தனர். இதனால் கார் முழுமையாக எரியாமல் தீ அணைக்கப்பட்டது.
2 பேர் சிக்கினர்
சம்பவம் பற்றி அறிந்த ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை அங்கு வந்து விசாரணை நடத்தினார். ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். முகத்தை மூடியபடி வந்துள்ளதால் மர்ம நபர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்ட போதிலும் முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கார்களில் பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் 2 நபர்களை பிடித்து சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர். யார் தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நடந்தது, பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.