அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். அரசுப் பணியாளர் சங்க மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார் சிறப்புரையாற்றினார். 1.1.2022 முதல் முன்தேதியிட்டு அறிவித்து அகவிலைப்படி நிலுவை ஊதியம் வழங்கப்பட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் நியாய விலைக்கடை பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதிய விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும், பொது வினியோக திட்டத்திற்கென தனித்துறை அமைத்து உணவுப்பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் சம்பத், இளங்கோவன், வீரப்பன், சங்கர், டெல்லிஅப்பாதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செயல் தலைவர் பாஸ்கரன் நன்றி கூறினார்.