திருச்சியில் அரசு பொருட்காட்சி தொடக்கம்
திருச்சியில் அரசு பொருட்காட்சி தொடங்கியது. தொடக்க விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், அன்பில்மகேஷ்பொய்யாமொழி பங்கேற்றனர்.
திருச்சியில் அரசு பொருட்காட்சி தொடங்கியது. தொடக்க விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், அன்பில்மகேஷ்பொய்யாமொழி பங்கேற்றனர்.
அரசுப் பொருட்காட்சி
திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசுப்பொருட்காட்சி நேற்று முதல் தொடங்கியது. இந்த பொருட்காட்சியை அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், அன்பில்மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்து, பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 96 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 4 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வரவேற்றார்.
விழாவில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், அன்பில்மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் பேசும்போது, "முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில் ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக மகளிருக்கு இலவச பஸ் பயணத்திட்டம், அரசு பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், மாணவ-மாணவிகளுக்கு காலை உணவுத்திட்டம் என எண்ணிலடங்கா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது" என்றனர்.
34 அரங்குகள்
அரசுப்பொருட்காட்சியில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்துறை, பள்ளிக்கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்பட 26 அரசுத்துறைகளை சேர்ந்த அரங்குகளும், திருச்சி மாநகராட்சி, ஆவின் உள்ளிட்ட 8 அரசு சார்பு நிறுவனங்களின் அரங்குகளும் என மொத்தம் 34 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பொருட்காட்சி நேற்று மாலை முதல் தொடங்கி 45 நாட்கள் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொருட்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.