அரசு விரைவு பஸ் சேவைகள் மனசுக்கு நிறைவாக இல்லை பயணிகள் கருத்து
அரசு விரைவு பஸ் சேவைகள் மனசுக்கு நிறைவாக இல்லை என்று பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விரைவு பஸ்கள்
தமிழகம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் அல்ட்ரா டீலக்ஸ் பஸ், குளிர்சாதன வசதி பஸ், படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன வசதி பஸ், படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ், குளிர்சாதன வசதி அல்லாத பஸ், கிளாசிக் பஸ் என தமிழகம் முழுவதும் 1,124 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இவற்றில் விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மண்டலங்களை உள்ளடக்கிய 10 மாவட்டங்கள் வழியாக சுமார் 850 அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
குளிர்சாதன பஸ்கள்
விழுப்புரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டு வந்த 2 பஸ்களும் நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக திருநெல்வேலிக்கு ஒரு பஸ் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. மற்ற அரசு விரைவு பஸ்கள் எதுவும் விழுப்புரம் மண்டலத்தில் இருந்து இயக்கப்படவில்லை. ஆனால் சென்னை, கோவை, திருச்சி, சேலம், பெங்களூரு உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வரும் 750 பஸ்கள் விழுப்புரம் நகரத்தை கடந்து செல்கின்றன. விழுப்புரத்தில் இருந்து கோவைக்கு தினமும் இரவு 9.30 மணிக்கு விரைவு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் இருந்தும் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் மற்றும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது. குளிர்சாதன பஸ்கள் கடலூரில் இருந்து திண்டிவனம் வழியாக காலை 6.30 மணி, 7.50 மணி, மதியம் 2.45 மணி, மாலை 4.30 மணி, இரவு 11.10 மணிக்கும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு காலை 5 மணி, 6.35 மணி, மதியம் 1.35 மணி மாலை 3.25 மணி, மாலை 6.40 மணி, இரவு 11.30 மணிக்கும் செல்கிறது. இது தவிர புதுச்சேரியில் இருந்து கடலூர், சிதம்பரம் வழியாக திருநெல்வேலிக்கு அரசு விரைவு பஸ் இயக்கப்படுகிறது.
புஷ் பேக்
பொதுவாக, தனியார் ஆம்னி பஸ்களை காட்டிலும் அரசு விரைவு பஸ்களில் கட்டணம் குறைவு என்பதால் இந்த பஸ் சேவைகளை ஏராளமான பயணிகள் நாடி வருகின்றனர். ஆனாலும் அரசு விரைவு பஸ்களில் பயணிகளுக்கான வசதிகள் இருக்கிறதா? என்று கேட்டால் பலரிடம் இருந்து இல்லை என்றுதான் பதிலாக வருகிறது.
ஏனெனில் ஒரு சில அரசு விரைவு பஸ்களை வெளியில் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் உள்ளே பக்க வாட்டு ஜன்னல் கண்ணாடிகளை தங்கள் வசதிக்கு ஏற்றவாறு ஏற்றி, இறக்க முடியாதவாறு உள்ளது. பஸ்களின் இருக்கைகளை அவ்வப்போது சுத்தம் செய்யாமலும், ஒருசில இருக்கைகள் சேதமாகி உட்கார முடியாத வகையில் இருந்து வருகிறது. மேலும் புஷ்பேக் இருக்கைகளும் பழுதடைந்து சரவர இயங்குவதில்லை.
சில பஸ்களின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளதால் மழைக்காலங்களில் பஸ்சிற்குள் மழைநீர் சொட்டு, சொட்டாக ஒழுகுவது என்று பயணிகள் தரப்பில் அடுக்கடுக்காக புகார்கள் கூறப்படுகிறது.
கால அட்டவணைப்படி குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு சரியான நேரத்தில் இறங்க வேண்டிய இடத்துக்கு கொண்டு சேர்ப்பது இல்லை. உணவு அருந்துவதற்காக தேசிய நெடுஞ்சாலையோரங்களில் நிறுத்தும்போது தங்களது சுயலாபத்துக்காக சுகாதாரமற்ற, தரமில்லாத உணவகங்களிலேயே டிரைவர்கள் நிறுத்தி வருகிறார்கள் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை பயணிகள் முன் வைக்கின்றனர்.
இது போன்ற குறைபாடுகளால் அரசு விரைவு பஸ் சேவைகளின் வசதிகள், மனதுக்கு நிறைவானதாக இல்லை என்பதே பயணிகள் பலரின் கருத்தாக இருக்கிறது.
கூட்ட நெரிசலால் சிரமம்
குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்களை பண்டிகை காலங்களில் சிறப்பு பஸ்களாக இயக்கப்படுவதால் அந்த நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வழக்கமான பஸ்களின் எண்ணிக்கை குறைகிறது. குறிப்பாக கடலூரில் இருந்து திருச்சிக்கு செல்லும் பஸ்களின் எண்ணிக்கையை குறைத்து, சென்னைக்கு கூடுதல் பஸ்களை இயக்குவது, இதன் காரணமாக பயணிகள் கூட்ட நெரிசலில் பயணித்து பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கண்டக்டர் பற்றாக்குறை
அதேபோன்று கடலூர் அரசு பணிமனையில் கண்டக்டர் பற்றாக்குறையும் நிலவுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூரில் இருந்து திருச்சிக்கு இரவு 10 மணியளவில் செல்லும் அரசு பஸ் கண்டக்டர் திருப்பதிக்கு விடுமுறை போட்டு சென்றுவிட்டார். இதன் காரணமாக, இரவில் வழக்கம் போல் இயக்கப்பட வேண்டிய பஸ் அன்று இயங்கவில்லை. இதை நம்பி இருந்த பயணிகளும் அன்று நிற்கதியாக நின்றனர். 2 நாட்களுக்கு பிறகு அந்த பஸ்சில் சென்ற கண்டக்டரிடம், இதுபற்றி ஒரு பயணிகேட்ட போது, பணிமனையில் கண்டக்டர் பற்றாக்குறை உள்ளது, நான் விடுமுறை எடுத்ததால், பஸ் இயங்கவில்லை என்று தெரிவித்தார். இதுபோன்ற நிலைதான் கடலூரில் இருந்து நீண்ட தூரம் இயக்கப்படும் பஸ்சில் நிலவுகிறது. எனவே ஏதேனும் ஒரு ஊருக்கு செல்ல வேண்டும் என்று இரவு நேரத்தில் பஸ்நிலையத்துக்கு வந்தால், அன்று பஸ் ஓடினால் மட்டுமே செல்ல முடியும். இல்லையெனில் பரிதாபநிலைதான்.
லாபநோக்கம் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அரசு போக்குவரத்துத்துறை செயல்பட்டு வருவதாக சொல்லிக்கொள்ளும் அதே வேளையில், பஸ்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
இது தொடர்பாக பயணிகள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த சித்ரா கூறுகையில், நான் வேலை நிமித்தமாக சென்னைக்கு அடிக்கடி சென்று வருகிறேன். ஆம்னி பஸ்களை போல் அரசு விரைவு பஸ்களிலும் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு போய் விடுகிறார்கள். அரசு விரைவு பஸ்கள் சுகாதாரமாக இல்லை. இருக்கையில் மாசு படிந்து காணப்படுகிறது. ஜன்னல் கண்ணாடிகளை வசதிக்கேற்றவாறு ஏற்றி, இறக்க முடியாது. அரசு போக்குவரத்து கழகம் இது போன்ற வசதிகளை செய்து கொடுத்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.
இருக்கைகள் மோசமாக உள்ளது
நடுவீரப்பட்டை சேர்ந்த குமார் கூறுகையில், ஆம்னி பஸ்கள் சரியான நேரத்துக்கு செல்லும். அவர்கள் பெரும்பாலும் பஸ் நிலையங்களுக்கு செல்வதில்லை. ஆனால் அரசு விரைவு பஸ்கள் பஸ் நிலையங்களுக்கு சென்று வருகிறது. பெரும்பாலான பஸ்களிலும் இருக்கைகள் மோசமாக தான் உள்ளது. இது போன்ற நிலையை மாற்றினால், அரசு போக்குவரத்து கழக பஸ்களில் அதிக பயணிகள் ஏறுவார்கள் என்றார்.
தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்த கோபால்:-
விழுப்புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். பெரும்பாலும் அரசு விரைவு பஸ்களில் சொந்த ஊருக்கு சென்று வருகிறேன். ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்கு என்னால் சென்று வர முடியாது. விழுப்புரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டால் திருநெல்வேலி செல்வதற்கு காலை 7 மணியாகிறது. அதுவே ஆம்னி பஸ்சில் கூடுதல் கட்டணம் என்றாலும் இரவு 10 மணிக்கு புறப்பட்டாலும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் சென்று விட முடிகிறது.
கூடுதல் வசதிகளுடன் அரசு பஸ்களை இயக்கினால் ஆம்னி பஸ்களை நாடிச்செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.
குழந்தைகள் சிரமம்
விழுப்புரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சுயம்புதுரைபாண்டியன்:-
எனது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது விழுப்புரம் கே.கே.நகரில் வசித்து வருகிறேன். நீண்ட தூரம் செல்லும் அரசு விரைவு பஸ்கள், சீரான இடைவெளியில் கழிப்பிடங்களில் நிறுத்துவதில்லை. இதனால் குழந்தைகள், பெண்கள் சிரமப்படுகின்றனர். எனவே ஆம்னி பஸ்களுக்கு இணையாக அரசு பஸ்களின் வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.
விழுப்புரம் அருகே அனந்தபுரத்தை சேர்ந்த வேணிஸ்ரீ:-
ஆம்னி பஸ்கள் அதிவேகமாக செல்வதால் மனதில் சற்று அச்ச உணர்வு இருக்கும். சமீபத்தில் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் ஆம்னி பஸ் விபத்தில் சிக்கி, பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். அரசு பஸ்கள் மிதமான வேகத்தில் சென்றாலும் அதில் பயணிப்பவர்களின் பயணம் பாதுகாப்பாகவும் அமைகிறது.