மெட்ரோ ரெயில் திட்டத்தால் கோவில்களுக்கு பாதிப்பு ஏற்படாது ஐகோர்ட்டில் அரசு உத்தரவாதம்
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தால் கோவில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், விஜய் நாராயணன் உள்பட பலர் தாக்கல் செய்துள்ள மனுவில், "மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி வரை 4-ம் வழித்தடம் அமைப்பது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில், வடபழனி வெங்கீஸ்வரர் மற்றும் அழகர் பெருமாள் கோவில், விருகம்பாக்கம் சுந்தரவரதராஜ பெருமாள் கோவில், வளசரவாக்கம் வேல்வீஸ்வரர் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில், அதன் குளம் என்று புராதன கோவில்களின் கட்டிடங்கள் அமைந்துள்ளன. மெட்ரோ ரெயில் திட்டத்தால் இந்த கோவில்களுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த கோவில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகளை முடிக்காமல், இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும்"என்று கூறி இருந்தனர்.
பாதிப்பு ஏற்படாது
மேலும், "மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் உள்ள சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட 3 தேவாலயங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பரிசீலிக்கப்பட்ட போதும், பழமையான கோவில்கள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பரிசீலிக்கப்படவில்லை" என்றும் கூறபட்டு இருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், "மெட்ரோ ரெயில் திட்டப்பணியால் கோவில் கட்டுமானங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவை பாதுகாக்கப்படும். வணிக பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்ட கோவில் நிலங்கள் மட்டும் கையகப்படுத்தப்பட்டுள்ளது" என்று உத்தரவாதம் அளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.