தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு தயார் -அதிகாரிகள் தகவல்


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு தயார் -அதிகாரிகள் தகவல்
x

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு தயாராக உள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சென்னை,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். வீரவிளையாட்டான இதனை காண வெளி மாநிலம் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் மதுரையை நோக்கி படையெடுத்து செல்வார்கள்.

காலம்காலமாக நடந்து வந்த ஜல்லிக்கட்டு மிருக வதை தடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக தன்னெழுச்சியாக நடந்த போராட்டத்தின் பயனாக கடந்த 2017-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு அனுமதி சட்டம் இயற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டது.

அதன் பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு எந்தவித இடையூறும் இல்லாமல் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் இந்த போட்டி கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

தீர்ப்பு ஒத்திவைப்பு

இந்த நிலையில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி, தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அனுமதி சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பீட்டா உள்ளிட்ட விலங்கு நல அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது.

இதில் மத்திய அரசு தரப்பில் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பின்னரே ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். காளைகளை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டு பாதுகாப்பாக நடத்தப்படுகிறது என்று வாதிடப்பட்டது.

அனைத்துதரப்பு விசாரணையும் நிறைவுபெற்ற நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

நடத்த தயார்

எனவே வருகிற பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் ஜல்லிக்கட்டுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை போட்டி ஏற்பாட்டாளர்கள் தொடங்கி விட்டனர்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, '2023-ம் ஆண்டு பொங்கலுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. இதுவரை அதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. எனவே ஜல்லிக்கட்டு போட்டிகளை 2017-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சட்டப்படி நடத்த முடியும். ' என்று தெரிவித்தனர்.

1 More update

Next Story