டேங்கர் லாரி மீது அரசு சொகுசு பஸ் மோதல்: 4 பேர் பலி, 26 பேர் படுகாயம் - சீர்காழியில் கோர விபத்து
சீர்காழியில் அரசு சொகுசு பஸ், டேங்கர் லாரி மற்றும் இருசக்கர வாகனத்தில் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீர்காழி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி அரசு சொகுசு பேருந்து ஒன்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச் சாலையில் பாதரகுடி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க அரசு சொகுசு பஸ் ஓட்டுநர் சாலையின் இடது புறமாக திருப்ப முயன்றார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் நின்ற டேங்கர் லாரி மீது அதிவேகமாக மோதியது. அத்துடன் நிலைகுலைந்த பஸ் மேலும் தறிகெட்டு ஓடி எதிரே வந்த இருசக்கர வாகனத்திலும் பயங்கரமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சிதம்பரம் பள்ளிப்படை கிராமத்தைச் சேர்ந்த பத்மநாபன், அருள்ராஜ், பாலமுருகன் ஆகிய 3 பேர் பஸ்சின் கீழே சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் அரசு சொகுசு பஸ்சில் பயணம் செய்த 44 பேரில் பஸ்சின் நடத்துநர் விஜயசாரதி உள்ளிட்ட உள்ளிட்ட 26 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அனைவரையும் மீட்டு 108 வாகனத்தின் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதில் அரசு சொகுசு பஸ் நடத்துநர் விஜயசாரதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த 11 பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.