தென்காசி உள்பட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

‘தமிழகத்தில் புதிதாக தென்காசி உள்பட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்’ என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
'தமிழகத்தில் புதிதாக தென்காசி உள்பட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்' என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முப்பெரும் விழா
நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் கல்லூரி நாள் விழா, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை நிற அங்கி அணிவிக்கும் விழா, மருத்துவ பேராசிரியர்கள், மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் முப்பெரும் விழா நேற்று நடந்தது.
மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மக்கள் நம்புகிறார்கள்
அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-
இந்த கல்லூரி பசுமை வளாகமாக காட்சி அளிக்கிறது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 2,047 படுக்கை வசதிகள் மற்றும் 47 துறைகள் உள்ளன. இங்கு தினமும் 4,000 பேர் புறநோயாளியாகவும், 1,750 பேர் உள்நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெரும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மக்கள் தமிழக அரசின் மருத்துவத்துறையை நம்புவது தான் இதற்கு காரணம்.
கடந்த ஒரு ஆண்டில் மத்திய அரசு சார்பில் தமிழக அரசுக்கு மருத்துவ துறைக்காக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சி காலத்தில் குறைவான விருதுகள் தான் வழங்கப்பட்டுள்ளன.
புதிய கட்டிடங்கள்
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது ரூ.72.10 கோடி மதிப்பில் 600 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட கட்டிடம் அறுவை சிகிச்சை பிரிவுக்காக கட்டப்பட்டு வருகிறது. அதேபோல் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் 50 படுக்கைகளுடன் ரூ.64 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. நெல்லை கண்டியபேரியில் ரூ.35.18 கோடி மதிப்பில் 100 படுக்கையுடன் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன. இதனை தமிழக முதல்-அமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர உள்ளார்.
அதேபோல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 'பே' வார்டு சிஸ்டம் மற்றும் முழு உடல் பரிசோதனை நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர நெல்லை மாவட்டத்தில் அம்பை அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவு கட்டிடம் ரூ.6.89 கோடி செலவிலும், வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த ரூ.30 கோடியும், மேலும் அங்கு ரூ.1 கோடியில் மாவட்ட ஒருங்கிணைந்த ஆய்வகம், மேலப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.5.83 கோடியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடமும் கட்டப்பட உள்ளது.
புதிய அரசு மருத்துவ கல்லூரிகள்
தமிழகத்தில் தென்காசி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், காஞ்சீபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன. அதற்கான முயற்சிகளை தமிழக முதல்-அமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், சண்முகையா, மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜூ, தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மருத்துவமனை துணை முதல்வர் சுரேஷ் துரை, கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






