கல்வி சுற்றுலாவிற்கு அமெரிக்கா செல்லும் அரசு மாதிரி பள்ளி மாணவன்


கல்வி சுற்றுலாவிற்கு அமெரிக்கா செல்லும் அரசு மாதிரி பள்ளி மாணவன்
x

கல்வி சுற்றுலாவிற்கு அமெரிக்கா செல்லும் அரசு மாதிரி பள்ளி மாணவனை ஆசிரியர்கள் பாராட்டினர்.

கரூர்

தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல்படி பள்ளிக்கல்வித்துறை சார்பாக 2022-23-ம் ஆண்டிற்கான பள்ளிகளுக்கு இடையே கல்வி மற்றும் செயல்பாடுகளுக்கான வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டுகள் மற்றும் அறிவியல் ஆய்வுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேசிய மற்றும் உலக அளவில் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார். இதனை அடுத்து அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் ஒவ்வொரு வாரமும் மன்றத்தேர்வு நடைபெறும். மன்ற தேர்வில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கு பெற்று வந்தனர். இதில் தரகம்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் சஞ்சய்தருண் இலக்கிய மன்ற போட்டியில் நான் விரும்பி படித்த நூல் என்ற தலைப்பில் பங்கு பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். தொடர்ந்து மாநில அளவில் நடந்த இதே போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார். மாநில அளவில் நடந்த 6 போட்டிகளில் ஒவ்வொரு போட்டிகளில் மாநில அளவில் தலா 25 மாணவர்கள் வீதம் மொத்தம் 150 மாணவர்கள் கல்வி சுற்றுலாவிற்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கரூர் மாவட்டத்தில் 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தரகம்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவன் சஞ்சய்தருணும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அமலி டைசி உள்பட ஆசிரியர்கள் மற்றும் கிராமமக்கள், மாணவ- மாணவிகள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மாணவர்கள் மத்தியில் கல்வி ஆர்வத்தை உயர்த்தும் நோக்கிலும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு அரசு சார்பாக மாணவர்கள் கல்வி சுற்றுலா விற்காக அமெரிக்கா நாட்டிற்கு அழைத்துச் செல்வதால் தமிழ்நாடு அரசுக்கு கிராம மக்களும், ஆசிரியர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Next Story