மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு
நாகை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டு ஆய்வு செய்து, வெளிநோயாளிகளுக்கு விரைவான சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
நாகை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டு ஆய்வு செய்து, வெளிநோயாளிகளுக்கு விரைவான சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆய்வு
நாகை அருகே ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் நாகை நகராட்சி பழந்தெருவில் உள்ள நகர்புற நல வாழ்வு மையத்தில், மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உடனிருந்தார்.
மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மாவட்ட நுற்கிருமி ஆய்வகம், பிரசவ பிரிவு பணியாளர்கள் அறை, பிரசவம் சம்பந்தப்பட்ட ஸ்கேன் செண்டர், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான ஸ்கேன் செண்டர் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, பொது ஆய்வகம், பிரசவ அறை, ரத்த வங்கி, டையாலிசிஸ் அறை, பொது அறுவை சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, கொரோனா ஓபி பிரிவு, வைரஸ் பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி மையம், சி.டி.ஸ்கேன் மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்
பின்னர் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள வெளி நோயாளிகள் பெயர் பதிவு செய்யும் அறை, மருந்தகம் மற்றும் மருந்துகள் பாதுகாப்பறை, ஆய்வகம், மருத்துவர்களின் அறை ஆகியவற்றை ஆய்வு செய்து, ஆஸ்பத்திரியை சுத்தமாக வைத்து கொள்ளவும், வெளி நோயாளிகள் சிகிச்சை பெற வரும்போது அவர்களது காலம் விரயமாகாமல் விரைவான சேவையை வழங்க வேண்டும் எனவும் மருத்துவ அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் அறிவுறுத்தினார்.
உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவை பார்வையிட்டு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் பெயர் மற்றும் விவரங்கள் பதிவு செய்தல், மருத்துவ அனுமதி சீட்டு வழங்குதல், நோயாளிகளின் தொடர் சிகிச்சை விவரங்கள் போன்றவை சரிவர மேற்கொள்ளப்படுகின்றனவா எனவும், மருந்து மாத்திரைகள் பற்றாக்குறையின்றி வழங்கப்படுகிறதா எனவும், நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
டாக்டர்களின் அணுகுமுறை
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நபர்களிடம் டாக்டர்களின் அணுகுமுறை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால், மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொ) டாக்டர் ஜெனிடா கிரிஸ்டியனா ரஞ்சனா, சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் ஜோஸ்பின் அமுதா, துணை இயக்குனர் டாக்டர் விஜயகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.