அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் 11-வது நாளாக வேலை நிறுத்தம்
அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரி 11-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி கோட்ட மேலாளர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குலசேகரம்
அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரி 11-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி கோட்ட மேலாளர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலைநிறுத்த போராட்டம்
குமரி மாவட்டத்தில் உள்ள அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கினர். இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 11-ந் தேதி நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தொழிற்சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை. இதனால் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று 11-வது நாளான போராட்டம் தொடர்ந்தது.
ஆர்ப்பாட்டம்
போராட்டத்தின் ஒரு பகுதியாக சிற்றாறு, குற்றியாறு, மணலோடை ஆகிய கோட்டங்களின் மேலாளர் அலுவலகங்கள் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிற்றாறு கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு தோட்டத் தொழிற்சங்க நிர்வாகி விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் தொழிலாளர்கள் ஜெஸ்டின், ஞானசுந்தர், பாபு, விஜி, இந்திரா, சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.