அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் 22-வது நாளாக வேலை நிறுத்தம்
அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி 22 -வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குலசேகரம்:
அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி 22 -வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தம்
அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் கோட்ட மேலாளர்கள் அலுவலகம் முன்பு தினமும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று 22-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இதையொட்டி தொழிலாளர்கள் சிற்றாறு, கோதையாறு, மணலோடை, கீரிப்பாறை போன்ற கோட்ட மேலாளர்கள் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து சி.ஐ.டி.யு. தோட்ட தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் எம்.வல்சகுமார் கூறியதாவது:-
ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு 2019 டிசம்பர் மாதம் முதல் 2022-ம் ஆண்டு நவம்பர் வரை நாளொன்றுக்கு ரூ.40 ஊதிய உயர்வு ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், அதை தர ரப்பர் கழகம் மறுத்து வருவதால் வேலை நிறுத்தம் 22 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அவரது முகாம் அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், ரூ.40 ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தினோம். அப்போது அவர் அரசின் கவனத்திற்கு தொழிலாளர்களின் கோரிக்கைகளை கொண்டு சென்று வெகுவிரைவில் தீர்வு காணப்படும் என்றார்.
அதைத்தொடர்ந்து நேற்று நாகர்கோவிலில் தொழிலாளர் துறை அலுவலகத்தில் தொழிலாளர் துறை துணை ஆணையாளர் மணிகண்ட பிரபு முன்னிலையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ரப்பர் கழகம் சார்பில் தொழில் நல்லுறவு அலுவலர் கலந்து கொண்டார். இக்கூட்டத்தின் முடிவில், தொழில் நல்லுறவு அலுவலர் பேசும் போது, வரும் 2 -ந் தேதி ரப்பர் கழக நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது அக்கூட்டத்தில் வேலை நிறுத்தம் தொடர்பாக விவாதிக்கப்பட்டு முடிவு எட்டப்படும் என தெரிவித்துள்ளார். என்றார்.