அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும்சென்றடைய நடவடிக்கை
அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கும்படி சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத்திடம் முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.
மாநாடு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிவகங்கை வந்த சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் கூறியதாவது:- மாவட்டத்தில் நடைபெறும் பணிகள் குறித்த விவரத்தை முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார். அவை திருப்திகரமாக இருந்தது. அவைகளை தொடர்ந்து செயல்படுத்துமாறு கூறினார்.
இந்த மாநாட்டில் விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் தொகையை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டார். தற்பொழுது வழங்கப்படும் ரூ.1100-ஐ ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கவும், ரூ.1000-ஐ ரூ.1400-கவும் உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
நடவடிக்கை
மேலும் மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்திற்கு ரூ.14 கோடி வந்துள்ளது. இந்த பணிகளை விரைவுபடுத்தி தரமாக செயல்படுத்தும்படி தெரிவித்தார். ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, சாக்கோட்டை, கண்ணங்குடி ஆகிய மூன்று ஒன்றியங்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை தரமாக விரைந்து முடிக்கும் படி தெரிவித்தார்.
மேலும் அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் எளிதாக சென்றடைய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.