கிராம அலுவலர்கள் ஒத்துழைப்பு இன்றி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது-கலெக்டர் பேச்சு


கிராம அலுவலர்கள் ஒத்துழைப்பு  இன்றி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது-கலெக்டர் பேச்சு
x

கிராம அலுவலர்கள் ஒத்துழைப்பு இன்றி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது என்று பெரம்பலூர் கலெக்டர் கூறினார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் 2-ம் கட்டமாக விடுபட்ட அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கான அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் 2 நாள் சிறப்பு பணி சார் பயிற்சியினை கலெக்டர் கற்பகம் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், பொதுமக்களிடம் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள். அரசு எந்த திட்டம் அறிவித்தாலும் அது பொதுமக்களிடம் சென்று சேர்ந்தால் தான் அந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் அரசின் திட்டங்களை மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்க முடியாது. தங்கள் பகுதியில் உள்ள பட்டா நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், ஆக்கிரமிப்பு நிலங்கள், நீர் வழித்தடங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் குறித்து நன்கு தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். மேலும் அதற்குரிய ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். கிராம கணக்குகள் பராமரிப்பினை முறையாக கற்று கொள்ள வேண்டும். பட்டா மாறுதல், பட்டா பிரிவினை, சான்றிதழ் வழங்குதல், மன அழுத்த மேலாண்மை, நில நிர்வாகம், சமூக பாதுகாப்பு திட்டம், தேர்தல் பணிகள் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியினை முறையாக கற்றுக்கொண்டு வருகின்ற வருவாய் நிர்வாக தீர்வாயத்தில் சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களிடம் நன்மதிப்பினை பெற முயற்சி செய்ய வேண்டும், என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சத்திய பால கங்காதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story