அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
நெகமம்
அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் தமிழக பள்ளி கல்வி துறை சார்பில் கலைத்திருவிழா நடத்தப்பட்டது. இதில் கும்மியாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், இசைக்கருவிகள் வாசித்தல், பாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தனிப்போட்டியும், குழு போட்டியும் நடைபெற்றது. இந்த திருவிழாவில் பல்வேறு அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்தநிலையில் நெகமத்தை அடுத்த சேரிபாளையம் அரசு மேல்நிலைப்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர் ஜேசன், கிணத்துக்கடவில் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டியில் 3 இசைக்கருவிகள் வாசிக்கும் பிரிவில் டிரம்ஸ் வாசித்து முதலிடம் பிடித்தார். பின்னர் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் முதல் இடத்தை பிடித்தார்.
இதேபோன்று அந்த பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் சஞ்சீவ் என்ற மாணவர், காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் தோல் கருவிகள் வாசிக்கும் பிரிவில் முரசு இசைத்து முதலிடம் பிடித்தார். சாதனை படைத்த மாணவர்களை தலைமை ஆசிரியை செல்வி, ஆசிரியர் மோகனசுந்தரவடிவேல் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழுவினர், பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர்கள், சக மாணவ-மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.