சங்ககிரி அருகே பரபரப்பு: பஸ் வசதி கேட்டு அரசு பள்ளி மாணவ- மாணவிகள் சாலைமறியல்
சங்ககிரி அருகே பஸ் வசதி கேட்டு அரசு பள்ளி மாணவ- மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
சங்ககிரி:
அரசு பள்ளி
சங்ககிரி அருகே வடுகப்பட்டி ஊராட்சி பாப்பநாயக்கனூர் பகுதியில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு சங்ககிரி, வைகுந்தம், வெள்ளையம்பாளையம், தாழையூர், காளிப்பட்டி பிரிவு, கொங்கணாபுரம், இருகாலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இதில் வைகுந்தம், கொங்கணாபுரம், காளிப்பட்டி பிரிவு, இருகாலூர், தாழையூர் வெள்ளையம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.
மாணவ- மாணவிகள் அவதி
திருச்செங்கோட்டில் இருந்து வடுகப்பட்டிவழியாக மகுடஞ்சாவடிக்கு அரசு டவுன்பஸ் இயக்கப்பட்டு வந்தது. அந்த பஸ்சில் பள்ளி மாணவ- மாணவிகள் பயணம் செய்து வந்தனர். தற்போது அந்த டவுன் பஸ், பள்ளி நேரத்தை தவிர்த்து வேறு நேரத்தில் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவ- மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்
பள்ளிக்கு வாடகை வாகனங்களில் சென்று வந்தனர். எனவே பள்ளிக்கூட நேரத்தில் பஸ்சை இயக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சாலை மறியல்
பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் மாதிரி பள்ளி அருகில் பாப்பநாயக்கனூர் பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை 9 மணி அளவில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சங்ககிரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வளர்மதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பஸ் இயக்கப்படும் நேரத்தை மாற்றி பள்ளி மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை, மாலை நேரங்களில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உதவி கலெக்டர் ஆலோசனை
அதன்பிறகு மாதிரி பள்ளிக்கு சங்ககிரி உதவி கலெக்டர் லோகநாயகி வருகை தந்தார். அவருடன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, பள்ளி தலைமை ஆசிரியர் அர்சுணன், திருச்செங்கோடு அரசு போக்குவரத்து கழக மேலாளர் சதாசிவம் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் பள்ளி மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை, மாலை நேரங்களில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.