ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவ-மாணவிகள்


ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று வந்த 4 அரசு பள்ளி மாணவ, மாணவிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பாராட்டி பரிசு வழங்கினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று வந்த 4 அரசு பள்ளி மாணவ, மாணவிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பாராட்டி பரிசு வழங்கினார்.

விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களிடையே அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உடையவர்களை கண்டறிந்து மாவட்ட அளவில் நடத்தப்பட்ட அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்று அதில் தேர்வான 4 மாணவ, மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர். இந்த மாணவ, மாணவிகளுக்கு மாணவர் அறிவியல் பேரவையின் சார்பில் வானவில் அறிவியல் விருதினை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கி பாராட்டினார்.

மேலும் தொடர்ந்து ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி சாதனை படைத்திட வேண்டுமென தெரிவித்ததுடன், மாணவ, மாணவிகளின் பெற்றோர்களையும் பாராட்டி தொடர்ந்து மாணவ செல்வங்களுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

6 நாள் பயிற்சி

தொடர்ந்து மாணவர் அறிவியல் பேரவை நிறுவனர் வாசன் தெரிவிக்கையில், அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவர்களுக்கிடையே அறிவியல் பாடத்தில் ஆர்வம் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு விஞ்ஞானிகள் மூலம் கருத்துரை மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டது. அந்த அடிப்படையில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட திறனாய்வு போட்டியில் சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிகள் எஸ்.தர்ஷினி, ஆர்.சுதர்ஷினி, சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவர் டி.பாண்டியராஜன், பரமக்குடி, எஸ்.ஆர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவர் எஸ்.தரணிதரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இவர்கள் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று 6 நாள் பயிற்சி பெற்றனர்.

அதனை தொடர்ந்து சென்னையில் ஐ.ஐ.டி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி கழகத்திற்கு சென்று விஞ்ஞானிகளை சந்தித்து கருத்துகள் கேட்டறிந்தனர். தற்பொது கலெக்டரால் வானவில் அறிவியல் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர்களைப் போல் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இதுபோல் ஆராய்ச்சி தொடர்பான சுற்றுப்பயணம் சென்று வர உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சத்திரக்குடி வாசன் மெட்ரிக் பள்ளி தாளாளர் வாசன், பரமக்குடி அப்துல்கலாம் பள்ளி தலைவர் முகைதீன் முசாபர் அலி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story