கபடி போட்டிகளில் அரசு பள்ளிகள் முதலிடம்
கபடி போட்டிகளில் அரசு பள்ளிகள் முதலிடம் பிடித்தன.
பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. கபடி, கோ-கோ, கால் பந்து, வாலிபால், ஹேண்ட் பால், ஆக்கி, பூப்பந்தாட்டம், கூடைப்பந்து, எறிபந்து, டேபிள் டென்னிஸ் (ஒற்றையர், இரட்டையர்), இறகுப்பந்து (ஒற்றையர், இரட்டையர்) ஆகிய குழு போட்டிகள் நடந்தன. போட்டியினை பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் நகராட்சி துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏற்கனவே பெரம்பலூர், குன்னம் குறு வட்ட அளவில் 14, 17, 19 ஆகிய வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட குழு விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த அணிகள் பங்கேற்றன. இதில் கபடி போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் அரும்பாபூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், 19 வயதுக்குட்பட்ட பிரிவில் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியும் முதலிடம் பிடித்தன. கோ-கோ போட்டியில் 14, 17 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் சில்லக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. வாலிபால் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. கால்பந்து போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் அனுக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. ஹேண்ட் பால் போட்டியில் 17, 19 வயதுகளுக்குட்பட்ட பிரிவுகளில் கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. பூப்பந்தாட்டம் போட்டியில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. டேபிள் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பிரிவிலும், இரட்டையர் பிரிவில் 19 வயதுகளுக்குட்பட்ட பிரிவில் கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. ஆக்கி போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. குழு விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த அணிகளின் வீராங்கனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த அணிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் விளையாடவுள்ளனர். வருகிற 20-ந்தேதி பள்ளி மாணவிகளுக்கும், 21-ந்தேதி பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.