காலை சிற்றுண்டி திட்டம் குறித்து ஆய்வு: பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட அரசு செயலாளர்
நாகர்கோவில் மாநகராட்சியில் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவின் தரத்தை குறித்து அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி ஆய்வு செய்து, மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சியில் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவின் தரத்தை குறித்து அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி ஆய்வு செய்து, மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
கண்காணிப்பு அதிகாரி
தமிழகத்தில் மாநகராட்சிகளில் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியை பொறுத்த வரையில் 19 அரசு தொடக்கப்பள்ளிகளில் இந்த திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவானது வாட்டர் டேங்க் ரோட்டில் அமைந்துள்ள மையத்தில் தயார் செய்யப்பட்டு பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளரும், குமரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான ஜோதி நிர்மலாசாமி நேற்று குமரி மாவட்டம் வந்தார். பின்னர் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்கப்படும் மையத்துக்கு நேரில் சென்று உணவின் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குவதற்கு முன்பு மாதிரி உணவினை எடுத்து வைக்க வேண்டும் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து செட்டிக்குளம் அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்று அங்கு 52 மாணவ-மாணவிகளுடன் சரிசமமாக தரையில் அமர்ந்து கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலாசாமி உணவு சாப்பிட்டார். அவருடன் சோ்ந்து கலெக்டர் அரவிந்த் மற்றும் அனைத்து அலுவலர்களும் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.
விடுதியில் ஆய்வு
பிறகு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி விடுதி மற்றும் டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் கிருஷ்ணன் கோவிலில் நடைபெற்றுவரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை பார்வையிட்டார். அதோடு வாத்தியார்விளையில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர் பாடம் நடத்துவதை திடீர் ஆய்வு மேற்கொண்டார். எண்ணும், எழுத்தும் குறித்து சிறப்பாக பதிலளித்த குழந்தைகளுக்கு பரிசும் வழங்கினார்.இதனையடுத்து தக்கலை அரசு ஆஸ்பத்திரி, கல்குளம் தாசில்தார் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வெள்ளிச்சந்தை ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுவிளை வண்ணாண்குளத்தினை ரூ.22.78 லட்சம் மதிப்பில் தூர்வாருதல், தடுப்புசுவர் மற்றும் படித்துறை கட்டும் பணியினை ஆய்வு செய்தார்.
ஆய்வு கூட்டம்
மேலும் சகாயநகர் பகுதியில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு ரூ.4.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் ஜோதிநிர்மலாசாமி பங்கேற்றார்.
செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் பழுதடைந்த வீடுகளை சரிசெய்யும் பணியினையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டார். முன்னதாக நாகர்கோவில் மாநகராட்சி, கல்குளம் தாலுகா, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், வருவாய் அலுவலர் சிவப்பிரியா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் நாகராஜன், இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) பிரகலாதன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மீனாட்சி, கல்குளம் தாசில்தார் வினோத், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.