அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்


அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்
x

நெல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நெல்லை பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனை அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ், பிரகாஷ், பால் கதிரவன், கோமதிநாயகம், மோதிலால் நேரு, மாரிராஜா, வசந்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பிரமநாயகம், ஸ்டேன்லி, ராமசாமி, அல்லாபிச்சை, சுப்பு உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கோரிக்கைகள்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, சரண்டர், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும்.

அரசு அனுமதித்த காலி பணியிடங்களில் விதிகளுக்கு உட்பட்டு நியமனம் பெற்று ஊதியமின்றி பணி செய்யும் ஆசிரியர்களுக்கு உடனடியாக நியமன ஏற்பளிப்பு அளித்து ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்டம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதில் திரளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர் காளிராஜ் நன்றி கூறினார்.


Next Story