'குழந்தையை இழந்த குடும்பத்திற்கு நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும்' - எடப்பாடி பழனிசாமி


குழந்தையை இழந்த குடும்பத்திற்கு நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
x

குழந்தையின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை முகமது தஹிர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது. குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவர்களின் தவறு காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாகவும், குழந்தையின் சிகிச்சை பற்றி கேட்டபோது மருத்துவர்கள் கேலி செய்ததாகவும், தனக்கு நீதி கிடைக்கவில்லை எனவும் குழந்தையின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், குழந்தைக்கு மூளையில் நீர்கசிவு, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்ததாகவும், உயர்தர சிகிச்சைகள் அளித்தும் குழந்தையை காப்பாற்ற இயலவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் குழந்தைக்கான சில மருத்துவ சிகிச்சைகளுக்கு பெற்றோர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தையை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த துயர நிகழ்விற்கு கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், அக்குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பினையும் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் மக்களை காக்கும் கடமையில் இருந்து அரசு ஒவ்வொரு நாளும் தவறிச் செல்வதை இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிரூபணம் செய்கின்றன என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Next Story