3 பேரின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்
காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்ககோரி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
கோவிலில் திருட்டு
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.
இந்த கூட்டத்தில் எட்டியாம்பட்டி இந்திரா நகர் பகுதி மக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் இந்த பகுதியில் 18 கிராம மக்கள் வழிபாடு செய்யும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரிய மாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியலில் பணம் திருடு போனதாக புகார் எழுந்துள்ளது. இது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த திருட்டு புகார் தொடர்பாக காவல்துறை மூலம் உரிய விசாரணை நடத்தி இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
நிவாரணம்
காரிமங்கலம் அருகே ஒடசக்கரை கிராமத்தைச் சேர்ந்த மாதம்மாள், அவருடைய மகன் பெருமாள் மற்றும் உறவினரான சரோஜா ஆகியோர் கடந்த 11- ந்தேதி துணி காய வைத்த போது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர். இவர்களுடைய குடும்பத்தினர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். இதனால் எங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேரின் வாரிசுகளுக்கும் அரசின் சார்பில் விபத்து நிவாரணத் தொகை வழங்க வேண்டும். இந்த குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.
விசாரணை நடத்த வேண்டும்
நார்த்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த கோரிக்கை மனுவில், இந்த ஊராட்சியில் 8 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஊராட்சி மோட்டார் பராமரிப்பு, ஊரக வேலை உறுதி திட்ட செயல்பாடு ஆகியவை குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும். அதன் மூலம் ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்திய கலெக்டர் சாந்தி அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியுள்ள மனுக்களுக்கு விரைவாக தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.