'அரசு வழங்கும் தடைக்கால நிவாரண தொகை போதுமானதாக இல்லை'


தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று முதல் தொடங்கியது. ‘அரசு வழங்கும் தடைக்கால நிவாரணம் தொகை போதுமானதாக இல்லை’ என்றும், தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி ரூ.8 ஆயிரம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று முதல் தொடங்கியது. 'அரசு வழங்கும் தடைக்கால நிவாரணம் தொகை போதுமானதாக இல்லை' என்றும், தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி ரூ.8 ஆயிரம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம்

மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும், சென்னை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15- ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும்.இந்த தடை காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படும்.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

தமிழகத்தில் நேற்று முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. தடைக்காலத்தையொட்டி நாகை மாவட்டத்தில் 32 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் நாகூர், நாகை, செருதூர், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை உள்ளிட்ட துறைமுகப் பகுதிகளில் தங்களது விசைப்படகுகளை நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த தடை காலத்தில் விசைப்படகு மீனவர்கள் படகுகளை கரைக்கு கொண்டுவந்து, அதில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்குவது, துருப்பிடித்த பகுதிகளை வெல்டிங் வைத்து சரி செய்வது, வண்ணம் தீட்டுவது, வலைகள் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு மராமத்து பணிகளை மேற்கொள்வார்கள்.

நாட்டு மீன்களின் விற்பனை அதிகரிப்பு

இந்த தடை காலத்தில் குறைந்த தூரம் சென்று தொழில் செய்யும் பைபர் படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் வழக்கம் போல கடலுக்கு சென்று மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள். விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் நாகையில் மீன்வரத்து குறைந்து விடும். இதனால் மீன்களின் விலை கணிசமாக உயரும். அதேபோல தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர் உள்ளிட்ட உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நாட்டு மீன்களின் விற்பனையும் அதிகரிக்க தொடங்கும். தடை காலத்தில் கடல் மீன்கள் வரத்து குறைந்துவிடும் என்பதால் நாட்டு மீன்களின் விலையும் அதிகரிக்கும்.

வருவாய் இழப்பு

இந்த தடை காலத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் பல கோடி மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்படும். மீன்பிடி தொழில் மற்றும் அதை சார்ந்த பிற தொழில்களில் ஈடுபடும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

இந்த தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் தடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். இதே நிவாரணத் தொகை தடை காலத்தில் வேலையின்றி தவிக்கும் மீன்பிடி தொழில் சார்ந்த மீன்பிடி தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.மீன்பிடித் தொழிலாளர்களையும் நலவாரியத்தில் இணைக்க வேண்டும் என்றுமீனவர்களும், மீன்பிடி தொழிலாளர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நிவாரண தொகை போதுமானதாக இல்லை

மேலும் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் மீனவர்களுக்கு மீன்பிடிதடைக்கால நிவாரணமாக ரூ.8 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பு குறித்து கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி தடைக்கால நிவாரணமாக ரூ.8 ஆயிரம் வழங்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் ராஜேந்திரன் நாட்டார் கூறும்போது :- மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் அரசு வழங்குகிறது. ஆனால் இந்த தொகை தற்போதைய விலைவாசி ஏற்றத்திற்கு போதுமானதாக இல்லை. இந்த நிவாரணத்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.

ரூ.8 ஆயிரம் வழங்க வேண்டும்

தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணமாக ரூ.8 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.

எனவே தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தப்படி தடைக்கால நிவாரணமாக ரூ.8 ஆயிரம் வழங்க வேண்டும். இதனை தடைக்காலம் முடிந்த பிறகு வழங்காமல், மீனவர்களுக்கு பயன்பெறும் வகையில் தடைகாலத்திலேயே வழங்க வேண்டும்.

மீன்பிடி தடை காலத்தின் போது துறைமுகங்களை ஒட்டியுள்ள நாகை கடுவையாறு, நாகூர் வெட்டாறு, வேளாங்கண்ணி, வெள்ளையாறு உள்ளிட்ட முகத்துவார பகுதிகளை தூர்வார வேண்டும். இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 111 விசைப்படகுகளை மீட்டு தர வேண்டும். கடலோரப் பகுதிகளில் உள்ள சேதமடைந்த அலை தடுப்பு சுவர்களை கணக்கிட்டு முறையாக சீரமைக்க வேண்டும் என்றார்.

மானியத்துடன் கடன் உதவி

நாகை அக்கரைபேட்டையை சேர்ந்த மீனவர் சவுந்தரபாண்டியன் கூறுகையில்,மீன்பிடி தடைக்கால நிவாரணமாக அரசு ரூ.5 ஆயிரம் வழங்கி வருகிறது. வேறு தொழில் தெரியாத மீனவர்களால் இந்த நிவாரண தொகையை வைத்து தொழில் குடும்பம் நடத்த முடியாது.

ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை தடைக்கால நிவாரணமாக கொடுத்தால்தான் தற்போதுள்ள விலைவாசிக்கு போதுமானதாக இருக்கும் என்பதால் மீனவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.

மீன்பிடி தடைக்காலத்தின் போது விசைப்படகுகளை பழுது நீக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மீனவர்கள் ஈடுபடுவார்கள். தடைக்காலத்தின் போது வருவாய் இல்லாததால் சீரமைப்பு பணிகளை மீனவர்கள் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே விசைப்படகுகளுக்கு தகுந்தார் போல் பழுது நீக்குவதற்கு மானியத்தில் கடன் உதவி வழங்க வேண்டும் என்றார்.


Next Story