பயணியிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ரூ.12,500 வழங்க உத்தரவு


பயணியிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ரூ.12,500 வழங்க உத்தரவு
x

பயணியிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ரூ.12,500 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூரை அடுத்த வாலிகண்டபுரத்தை சேர்ந்தவர் சையத் ஹூசைன். வழக்கறிஞர். இவர் கடந்த 13.3.2022 அன்று வாழப்பாடிக்கு சென்றுவிட்டு, ஆத்தூரில் இருந்து பெரம்பலூர் வந்த அரசு போக்குவரத்துக்கழக பஸ்சில், தனது 2 உறவினர்களுடன் பயணம் செய்தார். இதில் வழக்கமான பஸ்களில் சாதாரண கட்டணம் ரூ.36 ஆகும். ஆனால் அரசு போக்குவரத்து கழக விரைவு பஸ் என்று கூறி ரூ.45 கட்டணம் கேட்டதால், 3 பேருக்கும் சேர்த்து கண்டக்டரிடம் ரூ.135 செலுத்தி, சையத் ஹூசைன் பயண சீட்டுகளை பெற்றுக்கொண்டார். ஆனால் அந்த பஸ் அனைத்து பஸ் நிறுத்தங்களில் நின்று பெரம்பலூருக்கு 2 மணி நேரம் 15 நிமிடத்தில் வந்தடைந்தது.

வழக்கமாக ஆத்தூர்-பெரம்பலூர் இடையேயான பயண நேரம் சுமார் 1 மணி 45 நிமிடம் ஆகும். ஆனால் விரைவு பஸ்சுக்கான கட்டணத்தை பெற்றுக்கொண்டு, அந்த பஸ் தாமதப்படுத்தி, பெரம்பலூர் வந்ததால், சையத் ஹூசைன் மனநெருக்கடிக்கு ஆளானார். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் சையத் ஹூசைன் அரசு போக்குவரத்து கழக திருச்சி கோட்ட மேலாளர் மற்றும் பெரம்பலூர் டெப்போ கிளை மேலாளர் ஆகிய இருவர் மீதும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து, நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி ஜவகர், நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர், மனுதாரருக்கு சேவை குறைபாடு செய்து அவருக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியமைக்கு நிவாரணமாக ரூ.7 ஆயிரத்து 500 மற்றும் வழக்கு செலவுத்தொகையாக ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை எதிர்மனுதாரர்கள் இருவரும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story