அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சகாதேவன் தலைமை தாங்கினார். செயலாளர் வாசுதேவன், துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன் (நகரம்), ஜெகஜீவன்ராம் (புறநகர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வழங்கிட வேண்டும். அனைத்து அரசுத்துறைகளிலும் உள்ள ஓட்டுனர் காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். தர ஊதிய முரண்பாட்டை களைந்து, புதிய ஊதிய திருத்தத்தை அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓட்டுனர்களுக்கு கல்வி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பினர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22-ந்தேதி சென்னையில் கோட்டையை நோக்கி பேரணியாக செல்லவும் முடிவு எடுத்துள்ளதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.