இணையதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்


இணையதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 8 April 2023 6:45 PM GMT (Updated: 8 April 2023 6:46 PM GMT)

அரசு நலத்திட்டங்கள் பெற இணையதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

நயினார்கோவில்,

அரசு நலத்திட்டங்கள் பெற இணையதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வேளாண் அடுக்கு திட்டம்

தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களையும் ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்கு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் பெற, விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். வேளாண்மை உழவர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தோட்டக்கலை துறை, கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வணிகம், விதைச்சான்று, உணவு வழங்கல் மற்றும் சர்க்கரை துறை உள்ளிட்ட 13 துறைகளின் அனைத்து திட்டங்களும் கிடைக்க செய்யும் வகையில் நில உடைமை விவரங்கள் சரிபார்க்கப்பட்டு கிரயின்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் அனைவரும் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பட்டா நகல், புகைப்படம், அலைபேசி எண், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பயன்பெறலாம்

இதற்கான சிறப்பு முகாம் பணிகள் ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகத்திலும் நடந்து வருகிறது. நிலம் குத்தகைக்கு விடப்பட்டிருந்தால் நிலத்தின் உரிமையாளர், குத்தகைதாரர் விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது. அரசின் நலத்திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் அனைவரும் நில விவரங்கள் பதிவு செய்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்பு கொண்டு ஆவணங்கள் சமர்ப்பித்து பதிவு செய்து பயன்பெறலாம். இந்த தகவலை நயினார்கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் பானுபிரகாஷ் தெரிவித்தார்.


Next Story