பெற்றோரை கட்டாயப்படுத்தி குழந்தையை விற்க முயற்சி:அரசு பெண் டாக்டர் உள்பட 2 பேர் கைது


திருச்செங்கோட்டில் பெற்றோரை கட்டாயப்படுத்தி குழந்தையை விற்க முயன்ற அரசு பெண் டாக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்

திருச்செங்கோடு

குழந்தையை விற்க பேரம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 29). இவருடைய மனைவி நாகஜோதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி நாகஜோதிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது.

பின்னர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அந்த பச்சிளம் குழந்தையை திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பெற்றோர் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டராக அனுராதா என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இவர் கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த லோகாம்பாள் (38) என்பவருக்கு தகவல் கொடுத்து அவர் மூலம் ரூ.2 லட்சம் தருவதாக தினேஷ், அவரது மனைவி நாகஜோதியிடம் பேரம் பேசி பச்சிளம் குழந்தையை விற்க கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

2 பேர் கைது

இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோரிடம் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு இமயவரம்பன் மற்றும் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் அனுராதா, குழந்தைகள் புரோக்கர் லோகாம்பாள் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், டாக்டர் அனுராதா, லோகாம்பாள் ஆகிய இருவரும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்று இருப்பதும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆள் ஏற்பாடு செய்து கொடுத்து இருப்பதும் தெரிய வந்தது. மேலும் இந்த புகாரில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என தெரியவந்துள்ளதால், அவர்களையும் விரைவில் கைது செய்வோம் என போலீசார் தெரிவித்தனர்.

பெற்றோரை கட்டாயப்படுத்தி பச்சிளம் குழந்தையை விற்க முயன்ற அரசு பெண் டாக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story