ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்


ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
x
தினத்தந்தி 11 April 2023 12:18 AM GMT (Updated: 11 April 2023 12:22 AM GMT)

சட்டசபையில் கவர்னருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் திடீரென அனுமதி அளித்து உள்ளார்.

சென்னை,

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்கள் பணத்தை பறித்துக்கொண்டு கடனாளி ஆக்குவதோடு, விலை மதிப்பில்லாத மனித உயிர்களையும் காவு வாங்கி வருகிறது.

ஆன்லைன் சூதாட்டம் ஏராளமான குடும்பங்களை சீரழித்துள்ளது.

தடை மசோதா

உயிர் கொல்லியான ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடிவாளம் போடும் வகையில், தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி, 'ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை' விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பின்னர் இந்த மசோதா கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மசோதா குறித்து சில விளக்கங்களை கவர்னர் தரப்பில் இருந்து, தமிழக அரசிடம் கேட்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசும், கவர்னர் கேட்ட விளக்கத்தை தெரிவித்தது. ஆனாலும் கவர்னர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. உயிர்ப்பலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றால் இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

4 மாதங்களுக்கு பின்னர்

இந்த சூழ்நிலையில், சுமார் 4 மாதங்களுக்கு பின்னர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த மாதம் 8-ந் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். அதற்கான காரணம் குறித்து கவர்னர் அளித்த விளக்கத்தில், "ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார். இது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிய மறுநாளே அதாவது 9-ந் தேதியன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிய நிலையில், இந்த சட்ட முன்வடிவை மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி கவர்னருக்கு மீண்டும் அனுப்பிவைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

மீண்டும் சிக்கல்

இந்த சூழலில் கடந்த 23-ந் தேதி சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதாவை மு.க.ஸ்டாலின் மீண்டும் பேரவையில் தாக்கல் செய்தார். 24-ந் தேதியன்று அதாவது மறுநாளே இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு மீண்டும் அனுப்பிவைத்தது. இந்த முறையாவது கவர்னர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துவிடுவார் என்று தமிழக மக்கள் மிகவும் எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தனர்.

இதற்கிடையே, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களோடு கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 6-ந் தேதி கலந்துரையாடினார். அப்போது மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "மசோதா நிலுவையில் இருக்கிறது என்றால், ஒப்புதல் வழங்கவில்லை என்றுதான் அர்த்தம்" என்று பேசினார். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருந்தது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்துவதாக இருந்தது.

மு.க.ஸ்டாலின் கண்டனம்

கவர்னரின் கருத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் "சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போடுவதை நியாயப்படுத்துவது மிக மோசமான முன்னுதாரணம், தமிழக நலனுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார்" என்று கூறியிருந்தார். அரசியல் கட்சிகளும் கவர்னருக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 12-ந் தேதி கவர்னர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தன.

இதேபோல, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரத்தில், "தமிழக மக்களின் உணர்வுகளை கவர்னர் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்" என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை வெளியிட்டார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும், 'கவர்னர்கள் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிப்பதாக கண்டனம்' தெரிவித்து இருந்தார்.

கவர்னருக்கு எதிராக தீர்மானம்

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டசபையில் கவர்னருக்கு எதிராக நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மசோதாக்களுக்கு உரிய காலத்துக்குள் ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியை கேட்டுக்கொள்வதாக தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

மு.க.ஸ்டாலின் துரிதமாகவும், தொடர்ச்சியாகவும் எடுத்த நடவடிக்கையால் நேற்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். ஒப்புதலுக்காக அனுப்புவது, நிராகரிப்பு என கண்ணாமூச்சி ஆடி வந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒரு வழியாக 172 நாட்களுக்கு பிறகு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கவர்னர் ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் மூடு விழா காணப்பட்டு, சூதாட்டத்துக்கு அடிமையாகி உயிரையும், பணத்தையும் இழக்கும் சம்பவங்கள் தடுக்கப்படும் என்பதால் அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அரசிதழில் சட்டமாக வெளியிடப்படும்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த தகவல் கவர்னர் அலுவலகத்தில் இருந்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிக்கு அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒப்புதல் பெறப்பட்ட அந்த சட்ட மசோதாவை பெறுவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ராஜ்பவனுக்கு அனுப்பப்பட்டனர். இனி இந்த மசோதா அரசிதழில் சட்டமாக வெளியிடப்படும். அதில் எந்த தேதியில் வெளியிடப்படுகிறதோ, அந்த தேதியில் இருந்து அது நிரந்தர சட்டமாக அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தண்டனை என்னென்ன?

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த சட்டம் நடைமுறைக்கு வருவதால் விதிக்கப்படும் தண்டனைகள் விவரம் வருமாறு:-

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.


Next Story