ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த கவர்னர் கருத்து: பதில் அளிக்க ஓபிஎஸ் மறுப்பு
ஸ்டெர்லைட் போராட்டம் வெளிநாட்டு நிதியுடன் நடத்தப்பட்ட சம்பவம் என்று தமிழக கவர்னர் நேற்று பேசியிருந்தார்.
சென்னை,
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னை கிண்டி ராஜ்பவனில், சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுடன் நேற்று கலந்துரையாடினார். அந்த நிகழ்ச்சியில் அவர், 'ஸ்டெர்லைட் போராட்டம் வெளிநாட்டு நிதியுடன் நடத்தப்பட்ட சம்பவம்' என்றும், 'சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நிலுவையில் வைப்பது என்பது ஒப்புதல் வழங்கவில்லை என்று தான் அர்த்தம் என்றும்' காரசாரமாக பேசினார். தமிழக கவர்னரின் இந்த கருத்துக்கு எதிரக்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம், ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி ஆளுநர் ரவியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், கருத்து கூற விரும்பவில்லை எனக் கூறி அந்தக் கேள்விக்கு பதிலளிப்பதைத் தவிர்த்தார்.